search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிந்து நாசம்"

    சென்னை மீனம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கின் உட்புறம் குளிர்பான கடை உள்ளது.

    இந்த குளிர்பான கடையில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கடையில் உள்ள ஐஸ்பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதன் காரணமாக கடை தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம், கிண்டி மற்றும் தேனாம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வண்டியில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. பெட்ரோல் பங்குக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானிசாகர் அருகே 3 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம் பாளையம் கற்பூர காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமாரி (32), சாந்தாமணி (40), பத்மாவதி (40) இவர்கள் 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு விவசாய தோட்ட வேலைக்கு சென்று விட்டனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் முத்துக்குமாரியின் வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அருகில் இருந்த சாந்தாமணி மற்றும் பத்மாவதி வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் முத்துக்குமாரி வீட்டில் உள்ள வீட்டுச் சாமான்கள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் சாந்தாமணி வீட்டில் இருந்த மற்ற கட்டில், பீரோ மற்றும் ஒரு வெள்ளாடு, மொபட், பத்மாவதி வீட்டில் இருந்த வீட்டுச் சாமான்கள், அரை பவுன் தங்க கம்மல், பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    அட்டைப்பெட்டி கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அட்டைகள் எரிந்து நாசமாயின.

    விருதுநகர்:

    விருதுநகர் சூலக்கரையில் பாலாஜி பேக்கேஜிங் இண்ட ஸ்ட்ரீஸ் என்ற பெயரில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி வளாகத்தில் அட்டை ரீல்கள் இருந்தன.

    இதில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அட்டைகளில் பிடித்த தீ மளமளவென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    சேத்தியாத்தோப்பு அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு அருகே அகரசோழத்தரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கண்ணன். இவருடைய மனைவி வசந்தா. நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் இவர்களுடைய மகன் ஆனந்தபாபு மட்டும் கூரை வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இரவு திடீரென கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள தையல்நாயகி என்பவரின் கூரை வீட்டுக்கும் பரவி எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இருப்பினும் தீ விபத்தில் முத்துக்கண்ணன், தையல்நாயகி ஆகியோரின் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், துணிகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து சோழத்தரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடைக்கானல் மலையில் பயங்கர தீ விபத்தால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது. தொடர்ந்து தீ பரவி வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Kodaikanal #Forestfire
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருகிறது. இதனால்தான் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தற்போது காலை நேரத்தில் கடும் உறைபனியும், மதிய நேரத்தில் இதமான தட்பவெப்பதன்மை உள்ளது. கடும் பனி காரணமாக புல் பூண்டுகள் மற்றும் அரியவகை மரங்கள் கருகி வருகிறது.

    இதனிடையே நேற்று இரவு செண்பகனூர் அருகே வெள்ளப்பாறை என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீ பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் நெருப்பு மற்ற இடங்களில் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் தீ ஜூவாலை விண்ணைத்தொடும் அளவுக்கு எழும்பியது.

    பல மணிநேரமாக நெருப்பு எரிந்து கொண்டே இருந்ததால் மலைப்பகுதியில் உள்ள அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது.

    கஜா புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து காய்ந்து கிடக்கிறது. இதில் எளிதாக தீப்பற்றியதால் மற்ற இடங்களுக்கும் தீ பரவி வருகிறது. தொடர்ந்து தீ பரவி வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த வனத்துறை, தீயணைப்புத்துறையினர், பேத்துப்பாறை, வெள்ளப்பாறை மற்றும் மலை கிராம மக்களுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். #Kodaikanal #Forestfire



    கரூர் அருகே அடுப்பில் சுடுதண்ணீர் போட்டபோது சேலையில் திடீரென தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலாயுதம் பாளையம்:

    கரூர் மாவட்டம், புகளூர் பசுபதிநகரை சேர்ந்தவர் நாச்சியம்மாள் (வயது 76). இவர் குளிப்பதற்காக தரை மட்டத்தில் உள்ள அடுப்பில் சுடுதண்ணீர் போட்டார். அப்போது அவர் கட்டியிருந்த சேலையில் திடீரென தீப்பிடித்து உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நாச்சியம்மாள் மீது பற்றிய தீயை அணைத்தனர்.

    பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நாச்சியம்மாள் உயிரிழந்தார். 

    இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தேனி அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கார் தீ பிடித்து எரிந்து நாசமானது.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே போடி மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் தனது மனைவி ஜெயந்தி, மகன்கள் தினேஷ், ரித்திஷ் மற்றும் உறவினர் முத்துக்குமார் ஆகியோருடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தார்.

    உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சின்னமனூர் வழியாக கம்பம் சென்றனர். அப்போது சீலையம்பட்டி அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன் பக்கம் நொறுங்கி சேதமடைந்தது.

    அதில் இருந்து புகை வெளியானது. இதைபார்த்த அனைவரும் காரை விட்டு உடனடியாக வெளியேறினர். சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினர்.

    சிறிது நேரத்தில் கார் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இருந்த போதும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காயமடைந்த 5 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது. தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பெரியநாயகிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓரு சில ஓட்டு வீடுகளை தவிர அனைத்துமே கூரை வீடுகள் ஆகும். நேற்று மதியம் 1 மணியளவில் இந்த பகுதியில் உள்ள குருமூர்த்தி(வயது 50) என்பவர் வீடு திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.



    சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த வீடுகளிலும் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த சிவகுமார், தங்கையன், முத்துக் கிருஷ்ணன், பாலு, ராஜூ, சாமிக்கண்ணு, குமர கண்ணன், விவேகானந்தன், நாகராஜன், ராஜப்பன், அய்யப்பன், மணிகண்டன் சிவபாலன், பக்கிரிசாமி, மெய்க்கண்டவேல், மகேந்திரன், சண்முகம், குபேஸ்குப்தா, ராஜேந்திரன், ராஜீவ்காந்தி, வடிவேலு, இந்திரா, அண்ணாத்துரை, கருணாநிதி, பொதியப்பன், வாசுகி, ராமசாமி, பாஸ்கர், ரமணி, தங்கவேல், வைரக்கண்ணு, சித்ரவேல், பரசுராமன் ஆகியோரது வீடுகள் உள்பட 45 வீடுகள் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து ஏற்பட்டபோது அங்குள்ள வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர வெடிச் சத்தம் ஏற்பட்டது. அப்போது அங்கு தீயை அணைத்துக் கொண்டு இருந்த நெடும் பாலத்தை சேர்ந்த ராஜூ(48) தலையில் வெடித்த சிலிண்டரின் ஒரு பகுதி வந்து விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூர், முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய ஊர்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் 50்-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் அனைத்து வீடுகளும் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வராமல் கால தாமதமாக வந்ததால் தான் அனைத்து வீடுகளும் முழுமையாக எரிந்ததாகக் கூறி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த நகை, பணம், டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, பீரோ, துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாச மானது. சேத மதிப்பு லட்சக் கணக்கில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. இதுகுறித்து திருத் துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கலெக்டர் நிர்மல்ராஜ், தாசில்தார் மகேஷ்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதல் கூறினர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, 5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டது. 
    ×